என்.டி.டி.வி. இயக்குனர்கள் பதவியில் இருந்து பிரணாய் ராய், அவரது மனைவி விலகல்


என்.டி.டி.வி. இயக்குனர்கள் பதவியில் இருந்து பிரணாய் ராய், அவரது மனைவி விலகல்
x

என்.டி.டி.வி. இயக்குனர்கள் பதவியில் இருந்து அதன் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி விலகி உள்ளனர்.



புதுடெல்லி,


நாட்டில் அரசியல், பொழுதுபோக்கு மற்றும் அன்றாடம் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை தொகுத்து வழங்கும் பணியை என்.டி.டி.வி. தனியார் தொலைக்காட்சி செய்து வருகிறது. செய்தி சேனல், இணையதளம் வழியேயும் செய்திகளை வழங்கி வருகிறது.

இதன் நிறுவனர்களாக பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் உள்ளனர். இந்த நிலையில், என்.டி.டி.வி.யின் இயக்குனர்களாகவும் உள்ள அவர்கள் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளனர்.

என்.டி.டி.வி.யின் 29.18 சதவீதம் அளவிலான பங்குகளை தொழிலதிபரான கவுதம் அதானியின் குழுமம் சமீபத்தில் கைப்பற்றியது. இந்நிலையில், நேற்று நடந்த வாரிய கூட்டத்தின் முடிவில், பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராயின், இயக்குனர்கள் பதவி விலகல் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனை தொடர்ந்து உடனடியாக, சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா மற்றும் செந்தில் சின்னியா செங்கல்வராயன் ஆகியோர் புதிய இயக்குனர்களாவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதானி குழுமத்தின் 100 சதவீதம் முழுமையான துணை நிறுவனங்களில் ஒன்றான விஷ்வபிரதான் வர்த்தக தனியார் நிறுவனம் ஆனது, என்.டி.டி.வி.க்கு நிதியுதவி உள்ளிட்ட விவகாரங்களுக்கு உதவியாக இருந்த ஆர்.ஆர்.பி.ஆர். தனியார் நிறுவனத்தின் 99.5 சதவீத பங்குகளை கடந்த ஆகஸ்டில் வாங்கியிருந்தது.

இந்த ஆர்.ஆர்.பி.ஆர். தனியார் நிறுவனம், என்.டி.டி.வி.யின் 29.18 சதவீத பங்குகளை வைத்திருந்தது. அதனை, அதானி குழுமம் தன்வசப்படுத்தி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, என்.டி.டி.வி.யின் அடுத்த 26 சதவீத பங்குகளையும் விலைக்கு வாங்க தயார் என அதானி குழுமம் முன்வந்தது. இதனால், என்.டி.டி.வி.யின் 55.18 சதவீத பங்குகள் அந்த குழுமத்திற்கு செல்லும். இது என்.டி.டி.வி.யின் உரிமையாளராவதற்கு வழிவகுக்கிறது. எனினும், என்.டி.டி.வி.யின் 32.26 சதவீத பங்குகளை பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி தங்கள் வசம் வைத்துள்ளனர்.


Next Story