மங்களூரு அருகே, தந்தை கண்முன்னே சோகம்; 2-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் சாவு


மங்களூரு அருகே, தந்தை கண்முன்னே சோகம்; 2-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் சாவு
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு அருகே 2-ம் வகுப்பு மாணவன், தந்தை கண்முன்னே மாரடைப்பால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

மங்களூரு;


2-ம் வகுப்பு மாணவன்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா அமரமுத்னூரு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் ஆச்சார்யா. இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இவர்களுக்கு மோக்‌ஷித்(வயது 7) என்ற மகன் இருந்தான். இவன் குக்குஜட்கா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் சிறுவன் மோக்‌ஷித் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு சென்று இருந்தான். அப்போது பள்ளியில் வைத்து அவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ஆசிரியர்கள் இதுகுறித்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சிறுவனின் தந்தை சந்திரசேகர் பள்ளிக்கு விரைந்து வந்தார்.

மாரடைப்பு

அப்போது சிறுவன் மோக்‌ஷித் மயங்கி கீழே விழுந்துள்ளான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் உடனடியாக தனது மகனை மீட்டு சுள்ளியாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவனை டாக்டா்கள் பரிசோதித்தனர். அதில் சிறுவன் மோக்‌ஷித் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதைக்கேட்டு சிறுவனின் தந்தை சந்திரசேகர் கதறி அழுதார். தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கா்நாடகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதே போன்று 2 மாணவிகள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.

3 பேர் உயிரிழப்பு

அதாவது சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வைஷ்ணவி(வயது 14) என்ற சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அதே போல் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பகுதியை சேர்ந்த அனுஸ்ரீ(வயது 13) என்ற மாணவி தனது வீட்டில் படித்து கொண்டிருக்கும்போது ெநஞ்சுவலியால் மயங்கி விழுந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அனுஸ்ரீ மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த நிலையில் மாணவன் மோக்‌ஷித் மாரடைப்பால் உயிரிழந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி

பொதுவாக ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் கர்நாடகத்தில் ஒரே வாரத்தில் மாரடைப்பால் 3 மாணவ-மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story