சபரிமலைக்கு பெருவழிபாதையில் வரும் பக்தர்களுக்காக புதிய செயலி- கேரள வனத்துறை மந்திரி தகவல்


சபரிமலைக்கு பெருவழிபாதையில் வரும் பக்தர்களுக்காக புதிய செயலி- கேரள வனத்துறை மந்திரி தகவல்
x

கோப்புப்படம்  

எங்கெங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பதையும் இந்த செல்போன் செயலி மூலம் பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும்.

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடக்கிறது.

இந்த நிலையில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கேரள வனத்துறை மந்திரி ஏ.கே. சசீந்திரன் பம்பை வந்தார். அங்கு அவரது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மந்திரி ஏ.கே. சசீந்திரன் கூறியதாவது:-

எருமேலி - பம்பை மற்றும் வண்டிப்பெரியார்- சபரிமலை பாரம்பரிய பெருவழிப்பாதை வழியாக சபரிமலைக்கு நடைபயணமாக வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி உருவாக்கப்படும். இதன் பயன்பாடு இந்த சீசன் முதல் அமல்படுத்தப்படும். பக்தர்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதே இதன் நோக்கம்.

வனப்பாதைகளில் ஆபத்தான விலங்குகள் நடமாட்டம் உள்ள இடங்கள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் பெருவழிப்பாதைகளில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் எங்கெங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பதையும் இந்த செல்போன் செயலி மூலம் பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த ஆண்டு வனப்பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story