பெங்களூருவில் டிராக்டர்களில் அலுவலகங்களுக்கு சென்ற ஐடி நிறுவன ஊழியர்கள்!


ஐடி நிறுவனங்களுக்கும் டிராக்டர்களில் செல்ல வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

பெங்களூரு,

விவசாயத்திற்காக டிராக்டர்களில் சென்ற காலம் மாறி, ஐடி நிறுவனங்களுக்கும் டிராக்டர்களில் செல்ல வேண்டிய நிலை உருவாகிவிட்டது வினோதமாக உள்ளது. பெங்களூரு நகரில் உள்ள பல ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களுக்கு டிராக்டர்களில் செல்ல வேண்டிய நிலை உருவானது.

பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 130 மில்லி மீட்டர் மழை பெய்தது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் எச்ஏஎல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஏமலூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பலர் நேற்று தங்கள் அலுவலகங்களுக்கு டிராக்டர்களை எடுத்துச் சென்றனர்.

பெங்களூரு நகரத்தில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு டிராக்டர் சவாரி செய்வது முற்றிலும் புதிய அனுபவமாகும்.

டிராக்டர் சவாரி பற்றி ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் கூறுகையில், அலுவலகத்தில் லீவு எடுக்க முடியாது.எங்கள் பணி பாதிக்கப்படுகிறது. ரூ.50 கொடுத்து டிராக்டர்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அடுத்த டிராக்டர் வரும் வரை காத்திருக்கிறோம் என்றார்.

கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் பெங்களூரு புறநகர் சாலை (ஓ.ஆர்.ஆர்.) வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகி அந்த சாலையில் அமைந்துள்ள மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


இதன் காரணமாக ஐ.டி. நிறுவனங்கள் அரசு மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தின. ஊழியர்கள் பணிக்கு வராததால் ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவதாகவும் அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தன.

இதுகுறித்த புலம்பல் அடங்குவதற்குள் பெங்களூருவில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.


Next Story