4 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்; புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி அதிவேகத்தில் நடக்கிறது - மத்திய மந்திரி தகவல்


4 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்; புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி அதிவேகத்தில் நடக்கிறது - மத்திய மந்திரி தகவல்
x

image courtesy: PTI

4 ஆயிரம் பேர் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாகவும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி அதிவேகத்தில் நடக்கிறது என்றும் மத்திய மந்திரி கூறியுள்ளார்.

கொச்சி,

தற்போதைய நாடாளுமன்றம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு மாற்றாக புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

'சென்டிரல் விஸ்டா' திட்டத்தின்கீழ், நாடாளுமன்றம் மட்டுமின்றி, மத்திய அரசு செயலகம், ராஜபாதை மறுசீரமைப்பு, பிரதமர் அலுவலகம், துணை ஜனாதிபதி இல்லம் ஆகியவையும் கட்டப்பட்டு வருகின்றன. இம்மாதம் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இம்மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கட்டுமான பணிகள் முடிவடையவில்லை.

இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி ஒரு கருத்தரங்கை தொடங்கிவைத்தார். பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:-

கட்டுமான பணி நடக்கும் இடத்துக்கு நான் வாரந்தோறும் செல்கிறேன். பணிகள் அதிவேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. சுமார் 4 ஆயிரம் பேர் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள். பணி நிறைவடையும் தேதியை அறிவிப்பது பற்றி மத்திய அரசு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story