பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவம்: ஜவுளி வியாபாரி கைது


பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவம்: ஜவுளி வியாபாரி கைது
x

பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜவுளி வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. பெங்களூருவில் பிரபலமான ஓட்டல் என்பதால் எப்போதும் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இதனிடையே, இந்த ஓட்டலில் கடந்த 1ம் தேதி பயங்கர சத்தத்துடன் 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்பதால் தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் ஓட்டலுக்கு முகக்கவசம் அணிந்து பையுடன் வந்த நபர் ரவா இட்லி சாப்பிட்டுவிட்டு, தான் கொண்டுவந்த பையை ஓட்டலிலேயே வைத்துவிட்டு சென்றார். அந்த நபர் வைத்து சென்ற பையில் இருந்துதான் வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. உறுதியான நிலையில் முகக்கவசம் அணிந்துவந்த நபரை தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அந்த நபர் குறித்து தகவல்கள் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு தொடர்பாக ஜவுளி வியாபாரியை தேசிய புலனாய்வு மற்றும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவராக கருதப்படும் நபர் பல்லாரி பகுதியில் உள்ள கவுல் பஜாரில் ஜவுளி வியாபாரம் செய்துவருபவர் ஆவார். அவரை கைது செய்துள்ள அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் செயல்பட்டு வந்துள்ளார். அதேபோல், குண்டுவெடிப்பு சம்பவத்தில் அந்த நபருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story