ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை
ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 4 பயங்கரவாதிகளை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரிடமிருந்து 15 கைதுப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்பட பயங்கர ஆயுதங்களையும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஸ்ரீநகர் ஷனபுரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை கடந்த மாதம் 18-ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு மறுபதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தியது.
புல்வாமா மாவட்டத்தில் 5 இடங்கள் ஸ்ரீநகர் மாவட்டத்தில் 4 இடங்கள் என 9 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் டிஜிட்டல் கருவிகள் உள்பட பல்வேறு ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.