என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் ஷாரிக்; காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
மங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி ஷாரிக், என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மங்களூரு:
மங்களூரு குண்டுவெடிப்பு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நாகுரி பகுதியில் கடந்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம், பயங்கரவாதி ஷாரிக் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பயங்கரவாதி ஷாரிக், நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டி குக்கர் குண்டை கொண்டு சென்றபோது அது வெடித்து தீப்பிடித்தது தெரியவந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
ஷாரிக் கொண்டு வந்த குண்டு ஒரு பஸ்சை தகர்க்கும் சக்தி கொண்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து பயங்கரவாதி ஷாரிக்கும், ஆட்டோ டிரைவர் புருஷோத்தமும் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள பாதர் முல்லர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
என்.ஐ.ஏ. விசாரணை
இந்த நிலையில் ஷாரிக்கின் செல்போனை ஆய்வு செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் ெவளியாகின. அவர் தென்னிந்தியாவில் பயங்கரவாத அமைப்பை நிறுவி, ஆட்களை சேர்க்க திட்டமிட்டு வந்துள்ளார். ேமலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் 8 இடங்களில் தங்கி இருந்த ஷாரிக், பலருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக என்.ஐ.ஏ. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழ்நாடு கோவை, கேரள மாநிலம் கொச்சி ஆகிய பகுதிகளுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒத்துழைக்க மறுப்பு
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக் வேகமாக குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் 80 சதவீதம் குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஷாரிக் முழுமையாக குணமாகும் வரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் படிப்படியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணைக்கு ஷாரிக் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் முறையாக பதில் அளிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷாரிக் 80 சதவீதம் குணமடைந்து விட்டதால் அவரை டாக்டர்கள் ஒப்புதலுடன் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.