பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றவில்லை மத்திய அரசு மீது நிதிஷ் குமார் தாக்கு


பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றவில்லை மத்திய அரசு மீது நிதிஷ் குமார் தாக்கு
x
தினத்தந்தி 5 Nov 2022 3:15 AM IST (Updated: 5 Nov 2022 3:15 AM IST)
t-max-icont-min-icon

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று நிதிஷ்குமார் சாடினார்.

பாட்னா,

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தனது ஐக்கிய ஜனதாதளம் கட்சியை விலக்கிக்கொண்டு, ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணியுடன் கரம் கோர்த்து புதிய அரசை சமீபத்தில் அமைத்தார்.

2024-ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து முயற்சித்து வருகிறார். பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அவர் மத்திய பா.ஜ.க. அரசிடம் கோரி வருகிறார்.

இந்த நிலையில் பாட்னாவில் தனது அலுவலகத்தில், 200 உருது மொழிபெயர்ப்பாளர்களுக்கும், சுருக்கெழுத்தர்களுக்கும் பணி நியமன உத்தரவுகளை வழங்கி அவர் பேசினார்.

அப்போது அவர் மத்திய பா.ஜ.க. அரசை வெகுவாக சாடினார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக நிலுவையில்தான் உள்ளது. அது மத்திய அரசால் நிறைவேற்றப்படவில்லை. எல்லா ஏழை மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஏழை மாநிலங்களில் பயனுள்ள ஏதாவது நடக்கிறதா? வெறும் பிரசாரம் மட்டுமே நடக்கிறது.

எங்கள் அரசு சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின் முன்னேற்றத்துக்காக அதிலும் குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்து வருகிறது.

இவ்வாறு அவர் சாடினார்.

இதற்கு மத்தியில் நிதிஷ் குமாரை பீகார் மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நிதில் ஆனந்த் தாக்கி உள்ளார்.

இதையொட்டி அவர் கூறுகையில், "ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் உருது ஆசிரியர்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நிதிஷ்குமாரின் நோக்கம். பீகார் சட்டசபையில் உருது தெரிந்தவர்களை பணி அமர்த்த என்ன அவசியம் வந்தது? இனி எல்லா போலீஸ் நிலையங்களிலும் உருது மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். சகோதரரே, பீகாரில் ஒரு பாகிஸ்தானை உருவாக்காதீர்கள். மாறாக நீங்கள் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள்" என குறிப்பிட்டார்.


Next Story