'இந்தியா கூட்டணியில் இருந்திருந்தால் நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராகி இருக்கலாம்' - அகிலேஷ் யாதவ்


இந்தியா கூட்டணியில் இருந்திருந்தால் நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராகி இருக்கலாம் - அகிலேஷ் யாதவ்
x
தினத்தந்தி 27 Jan 2024 6:10 AM GMT (Updated: 27 Jan 2024 6:31 AM GMT)

இந்தியா கூட்டணியை முயற்சி எடுத்து உருவாக்கியவர் நிதிஷ் குமார்தான் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாட்னா,

பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்.

பின்னர் பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்துவதாக கூறி, லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்த நிதிஷ் குமார், பீகார் மாநிலத்தின் முதல்-மந்திரியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனிடையே எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை அமைப்பதிலும் நிதிஷ்குமார் முக்கிய பங்காற்றினார்.

இந்த சூழலில், பீகாரில் கூட்டணி கட்சியான லாலுபிரசாத் கட்சியுடன் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி வலுத்து வருகிறது. அதேசமயம் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமாரை நியமிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் வலியுறுத்தியும் கூட்டணி கட்சிகள் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "இந்தியா கூட்டணியுடன் வலுவாக நின்றிருந்தால் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக ஆகியிருக்கலாம். அவர் இந்தியா கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் அக்கூட்டணியை முயற்சி எடுத்து உருவாக்கியவர் அவரே" என்று தெரிவித்தார்.


Next Story