ரவுடி 'சைலண்ட் சுனில்' மீது புதிய வழக்கு எதுவும் இல்லை


ரவுடி சைலண்ட் சுனில் மீது புதிய வழக்கு எதுவும் இல்லை
x
தினத்தந்தி 29 Nov 2022 2:31 AM IST (Updated: 29 Nov 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவில் சேர திட்டமிட்டுள்ள ரவுடி ‘சைலண்ட் சுனில்’ மீது புதிதாக வழக்கு எதுவும் இல்லை என்று மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

ரவுடி 'சைலண்ட் சுனில்'

பெங்களூருவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரவுடிகளின் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். அதாவது 86 ரவுடிகளின் வீடுகளில் நடந்த சோதனையின் போது 28 பேர் மட்டுமே போலீசாரிடம் சிக்கி இருந்தனர். அவர்களை போலீசார் குற்றங்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் ரவுடிகள் 'சைலண்ட் சுனில்', சைக்கிள் ரவி உள்பட பலர் தலைமறைவாக இருப்பதாக போலீசார் கூறினார்கள். இதற்கிடையில், சாம்ராஜ்பேட்டையில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ரவுடி சைலண்ட் சுனில் பங்கேற்று இருந்தார். இதில், பா.ஜனதா தலைவர்களுடன் சைலண்ட் சுனிலும் மேடையில் அமர்ந்திருந்தார்.

ரத்ததான முகாமில் பங்கேற்பு

இதையடுத்து, பிரபல ரவுடியான சைலண்ட் சுனில், பா.ஜனதா தலைவர்களுடன் ரத்ததான முகாமில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ரத்ததான முகாமில் பங்கேற்றதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் சைலண்ட் சுனில் பா.ஜனதாவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய வழக்கு இல்லை

சாம்ராஜ்பேட்டையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சைலண்ட் சுனில் பங்கேற்று இருப்பது பற்றி எனது கவனத்திற்கும் வந்தது. ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த பாரபட்சமும் பார்க்கப்படாது. இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்களின் அழுத்தமும் போலீசாருக்கு இல்லை. நகரில் 86 ரவுடிகளின் வீடுகளில் நடந்த சோதனையின் போது சைலண்ட் சுனிலின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

அவர் மீது புதிதாக வழக்கு எதுவும் பதிவாகவில்லை. எந்த சம்பவத்திலும் அவர் ஈடுபடவில்லை. கோர்ட்டில் இருந்து கைது வாரண்டு எதுவும் சைலண்ட் சுனிலுக்கு எதிராக பிறப்பிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story