பிரதமருக்கு எதிராக அப்படி பேச ஒருவருக்கும் உரிமை இல்லை: பிலாவல் பேச்சுக்கு காங்கிரஸ் முதல்-மந்திரி கண்டனம்


பிரதமருக்கு எதிராக அப்படி பேச ஒருவருக்கும் உரிமை இல்லை:  பிலாவல் பேச்சுக்கு காங்கிரஸ் முதல்-மந்திரி கண்டனம்
x

பிரதமருக்கு எதிராக அப்படி பேச ஒருவருக்கும் உரிமை இல்லை என பிலாவல் பேச்சுக்கு காங்கிரஸ் முதல்-மந்திரி கண்டனம் தெரிவித்து உள்ளார்.



புதுடெல்லி,


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் பேசிய மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், பயங்கரவாத செயல்களை ஆதரிக்கும் பாகிஸ்தானை சாடி பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடியை குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் என குறிப்பிட்டார்.

அவரது இந்த சர்ச்சை கருத்து இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்து தொடர்பாக அவருக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பா.ஜ.க.வின் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதுபற்றி காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்காரின் முதல்-மந்திரியான பூபேஷ் பாகல் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பிலாவல் பூட்டோவின் (பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி) அதுபோன்ற பேச்சுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். அதற்கு சரியான தக்க பதிலடி தரப்பட வேண்டும்.

நமது பிரதமரை பற்றி அப்படி பேச ஒருவருக்கும் உரிமை இல்லை. எங்களுக்கு இடையே வெவ்வேறு அரசியல் கொள்கைகள் இருக்கும். ஆனால், இது நாடு பற்றிய விசயம். எங்களது பிரதமராக மோடி இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story