மத்திய அரசு பணிக்கு இந்தியில் மட்டும் தேர்வா? - மத்திய உள்துறை இணை மந்திரி பதில்


மத்திய அரசு பணிக்கு இந்தியில் மட்டும் தேர்வா? - மத்திய உள்துறை இணை மந்திரி பதில்
x

மத்திய அரசு பணிக்கு இந்தியில் மட்டும் தேர்வா என்பது குறித்து மத்திய உள்துறை இணை மந்திரி பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்குமார் மிஸ்ரா ஒரு கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-

மத்திய அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை.

அதுபோல், அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தியை கட்டாயமாக்கும் திட்டம் இல்லை. அந்த கேள்வியே எழவில்லை. தேசிய கல்வி கொள்கை, தாய்மொழி வழி கல்வியை ஊக்குவிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட 6 ஆயிரத்து 677 தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது. இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனங்கள், மீண்டும் பதிவு செய்ய தகுதி இல்லை.

அதிகபட்சமாக, தமிழ்நாட்டில் 755 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் 734 நிறுவனங்களும், உத்தரபிரதேசத்தில் 635 நிறுவனங்களும் உரிமத்தை இழந்துள்ளன.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, கொரோனாவுக்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இத்தொகை வழங்கப்படுகிறது.

தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்களின்படி, 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 2 ஆயிரத்து 900-க்கு மேற்பட்ட மதக்கலவர வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story