நொய்டா இரட்டை கோபுரம் இடிப்பு; சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் சில நாட்கள் அப்பகுதிக்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள்; மருத்துவர்கள் அறிவுறுத்தல்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது.
புதுடெல்லி,
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பில் இதுவரை யாரும் குடியேறவில்லை. ஒரு டவரில் 32 தளங்களும் மற்றொரு டவரில் 29 டவர்களும் உள்ளன.
இந்நிலையில், இந்த கட்டுமானமானது விதிகளுக்கு புறம்பானது என புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், கடந்தாண்டு கட்டடங்களை வெடி வைத்து தகர்க்க சுப்ரீம் உத்தரவிட்டது. இதை வெடிவைத்து தகர்க்கும் பணி எடிபைஸ் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி 28-ம் தேதி (இன்று) மதியம் 2.30 மணிக்கு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. வெறும் 9 நொடிகளில் கட்டிடம் சீட்டுக் கட்டுபோல சரிந்தது. கட்டிடம் இடிந்து விழுந்ததும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
80 ஆயிரம் டன்கள் குப்பைகள் கட்டிட இடிபாடுகளாக குவிந்துள்ளன. கட்டிட இடிபாடுகளின் தூசுகள் அப்பகுதியில் உள்ள காற்றில் சில நாட்களுக்கு இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் அப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.