மத்திய நிதிகளை வீணடிப்பதாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மீது மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு


மத்திய நிதிகளை வீணடிப்பதாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மீது மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு
x

பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், மத்திய நிதிகளை வீணடிப்பதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் குற்றம்சாட்டினார்.

மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மக்களவை தொகுதியில் எம்.பி.யாக இருந்து காங்கிரஸ் கட்சியின் சந்தோக்சிங் சவுத்ரி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு வரும் 10-ந் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்ய வந்த மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-மந்திரி பகவந்த் மான் அரசு, மாநிலத்துக்கான மானியங்களை மத்திய அரசு தராமல் இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டுகிறது. ஆனால் ஏற்கனவே மத்திய அரசு வழங்கிய மானியங்கள், என்ன நோக்கத்துக்காக வழங்கப்பட்டதோ அதற்காக ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை.

சுயவிளம்பரத்துக்காக மத்திய நிதி

மத்திய மானியங்களை தங்கள் விருப்படிப்படியே செலவழித்தனர். பயன்படுத்தியதற்கான சான்றிதழை கேட்கிறபோது, அவர்களால் தர முடியவில்லை. கூடுதல் நிதியை விடுவிக்குமாறு கேட்கிறார்கள்.

மத்திய அரசு வழங்குகிற மானியங்கள் வளர்ச்சிப்பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதற்கு பதிலாக ஊடகங்களில் சுயவிளம்பரம் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆளும்கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள்

பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளிடம் (எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள்) பொறுப்புக்கூறல் இல்லை. ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் தலைமையிடம் முழுமையான பொறுப்புகூறல் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்கள் தீவிரமாக பின்பற்றப்பட்டு கணக்கு காட்டப்படுகிற.து.

பா.ஜ.க. ஆட்சி நடக்காத மாநிலங்களில், மத்திய நிதியை கொள்ளையடிப்பதையும், வீணாக்குவதையும் அனுமதிக்கின்றனர். அது மட்டுமல்லாமல், திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படுவதில்லை. மேலும் அவை பொறுப்பேற்பதும் இல்லை.

பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தமட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டு வருகிறது. சகோதரத்துவத்தையும், தேசியத்துவத்தையும், மக்களிடையே பரஸ்பர நல்லிணக்கத்தையும் கொண்டுவர பா.ஜ.க. உறுதி கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story