சீனாவில் கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என்ன? இந்தியா கொரோனா குழு தலைவர் கூறும் தகவல்
சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு 4 வகைகள் தான் காரணம் என்று இந்தியாவின் கொரோனா குழு தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சீனாவில் 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டுவிட்டதைத் தொடர்ந்து, அங்கு தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. பல நகரங்களிலும் ஆஸ்பத்திரிகள், கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. இது உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்துள்ளது.
பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்த பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக்கொள்ளப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. முதலில் அங்கு சர்வதேச பயணிகள் 2 வாரங்கள், அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என்ற நிலை இருந்து வந்தது. பின்னர் இது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இனி தனிமைப்படுத்தப்படுவது ரத்தாகிறது. சீனா தனது எல்லைகளையும் திறந்து விடுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு நான்கு வகைகள் காரணமாகின்றன என்று மத்திய அரசின் கொரோனா குழுவின் தலைவரான என்.கே. அரோரா கூறியுள்ளார்.
அதாவது, ஓமிக்ரான் மாறுபாட்டின் பிஎப்-7 திரிபு 15% பாதிப்புகளுக்கு காரணம் என்றும் பெரும்பாலான பாதிப்புகள் (50%) பிஎன் மற்றும் பிக்கியூ தொடரிலிருந்து வந்தவை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 10-15% பாதிப்புகள் எக்ஸ்பிபி மாறுபாட்டிலிருந்து வந்தவை எனவும் கொரோனா குழுவின் தலைவரான என்கே அரோரா கூறியுள்ளார். மேலும் சீனாவை போன்று இந்தியாவில் அது போன்ற நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
97 சதவீத இந்தியர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது, மற்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட 96 சதவீத குழந்தைகள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளதால் குழந்தைகள் கூட பாதுகாப்பாக உள்ளனர் அதனால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.