அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் - நாளை விசாரணை
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவில், 'சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும். இரு நீதிபதிகளின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. சார்பிலும் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு கட்சி விதிப்படி முறையாக நோட்டீஸ் அளிக்கப்படவில்லை, அந்த நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன் அனுப்பப்படவில்லை. எவ்வித அதிகாரமும் இல்லாதவர்களை கொண்டு பொதுக்குழு நடத்தப்பட்டதாக மனுதாரர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டத்தை போலவே ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டமும் முறைப்படி கூட்டப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கவும், பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யவும், பொதுச்செயலாளர் நியமிக்கப்படும் வரை, அவரின் பணிகளை தொடரும் வகையில் இடைக்கால பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யவும், 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தவும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கவும், குறிப்பாக கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தாக்கல் செய்யவில்லை. மாறாக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி மட்டும்தான் மனு தாக்கல் செய்தார். எனவே, சுப்ரீம் கோர்ட்டில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது.
கட்சியின் உறுப்பினர்களை சட்டவிரோத கோஷ்டி, கட்சியை பலவந்தமாக கைப்பற்றவே இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு என ஓ.பன்னீர்செல்வம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
காலாவதியான பதவிகள்
அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைவரையும் கட்டுப்படுத்தும். இதை தெரிந்துகொண்டே ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவை சிலர் மட்டுமே கொண்ட குழு என தெரிவித்து வருகிறார்.
2021 டிசம்பர் 1-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர பதவிகள் குறித்த கட்சி விதிகள் திருத்தம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பொதுக்குழுவின் ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த திருத்தங்கள் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறாததால், நடைபெற்ற தேர்தலும் காலாவதியாகி விட்டது. எனவே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர பதவிகள் புதுப்பிக்கப்படாததால், அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டன.
செயற்குழுவில் இயற்றப்படு்ம் தீர்மானங்கள் அனைத்திற்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்துவது முரணாக உள்ளது. எனவே, அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக வைரமுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாளை விசாரணை
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்புடைய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நாளை (திங்கட்கிழமை) மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.