ஒடிசாவில் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு


ஒடிசாவில் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு
x

ஒடிசாவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மகாநதி ஆற்றுநீர் அமைப்பில் ஏற்கனவே கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இதன் தொடர்ச்சியாக வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாநிலத்தின் வடக்கு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஜார்கண்டில் உள்ள நீர் தேக்கங்களில் இருந்தும் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதனால் ஒடிசாவில் ஓடும் முக்கியமான ஆறுகளில் அபாய அளவை கடந்து தண்ணீர் செல்கிறது. குறிப்பாக சபர்நரேகா ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் கரையோர பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இதனால் பாலாசோர், மயூர்ப்கஞ்ச் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இதைப்போல புதாபலாங், ஜலகா ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஜாஜ்பூர் மாவட்டத்தில் பைத்தரானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தஸ்ரத்பர், கோரை உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த மழை வெள்ளத்தால் பாலாசோர் மாவட்டத்தில் மட்டும் 156 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக மாநில மந்திரி துகுனி சாகு தெரிவித்தார்.

எனவே இந்த பகுதிகளில் வசித்து வரும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் நேற்று காலைக்குள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் 227 தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக அவர் கூறினார்.

இந்நிலையில் பாலாசோர், மயூர்பஞ்ச், ஜாஜ்பூர் மற்றும் பத்ரக் மாவட்டங்களில் உள்ள 251 கிராமங்கள் வடக்கு ஒடிசா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 9.66 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story