காபித்தோட்டங்களில் வேலை செய்பவர்களின் விவரங்களை சேகரித்து மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்


காபித்தோட்டங்களில் வேலை செய்பவர்களின் விவரங்களை சேகரித்து மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்
x

காபித்தோட்டங்களில் வேலை செய்பவர்களின் விவரங்களை சேகரித்து மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காபித்தோட்ட உரிமையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிக்கமகளூரு;

ஆலோசனை கூட்டம்

சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் ரமேஷ் தலைமையில் மாவட்டத்தைச் சேர்ந்த காபித்தோட்ட உரிமையாளர்கள், சங்க தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரமேஷ் பேசியதாவது:-

காபித்தோட்டத்தில் வேலைக்காக வருபவர்களின் ஆதார் கார்டு மற்றும் பிற விவரங்களை காபித்தோட்ட உரிமையாளர்கள் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனை பேர் வேலைக்கு வருகிறார்கள்.

அவர்களது குடும்ப பின்னணி, காபித்தோட்டத்திலேயே தங்கி வேலை செய்பவர்கள் எத்தனை பேர், அவர்களது குழந்தைகள் படிக்கிறார்களா?, குடும்பத்தினர் எங்கு வசிக்கிறார்கள் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விசாரித்து தெரித்து வைத்திருக்க வேண்டும்.

சட்டவிரோத செயல்களில்...

தகவல்களை சேகரித்து மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். எந்தவொரு ஆவணமும் இல்லாமல் வேலைக்கு ஆட்களை அமர்த்தினால் சம்பந்தப்பட்ட காபித்தோட்ட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த வாரம் என்.ஆர்.புரா தாலுகாவில் வங்காளதேசத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் சட்டவிரோதமாக இங்கு தங்கியிருந்து காபித்தோட்டத்தில் வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை மீண்டும் வங்காளதேசத்துக்கே அனுப்பி விட்டோம்.

வெளி மாநிலம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு தங்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதை கருத்தில் கொண்டு காபித்தோட்ட உரிமையாளர்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா மற்றும் காபித்தோட்ட உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story