"ஒரு தேர்வு நீங்கள் யார் என்பதை வரையறுக்காது" - சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குறித்து பிரதமர் மோடி டுவீட்
சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
புதுடெல்லி,
நீண்ட நாட்களாக தாமதமான நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. காலை 9 மணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடந்து மதியம் 2 மணிக்கு 10-வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், "சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற எனது அனைத்து இளம் நண்பர்களுக்கும் வாழ்த்துகள். இளைஞர்களின் திறமையும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது. மனிதகுலம் ஒரு மாபெரும் சவாலை எதிர்கொண்ட காலத்தில் அவர்கள் இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகினர்.
சில மாணவர்கள் தங்கள் முடிவுகளில் மகிழ்ச்சியடையாமல் இருக்கலாம், ஆனால் ஒரு தேர்வு அவர்கள் யார் என்பதை ஒருபோதும் வரையறுக்காது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு ஆர்வமுள்ள பாடங்களைத் தொடர்ந்து படிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். தங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.." என தெரிவித்துள்ளார்.
10 வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்,"சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். மாணவர்களின் கல்விப் பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள். வரும் காலங்களில் இந்த இளைஞர்கள் வெற்றியின் புதிய உயரங்களை எட்டுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்." என தெரிவித்துள்ளார்.