ஒரு தலை காதல்; பிளஸ் 2 மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - மக்கள் போராட்டம்
ஒரு தலை காதலால் பிளஸ் 2 மாணவி பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டதில் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தும்கா,
ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி அங்கிதா குமாரி. இவரை, வாலிபர் ஒருவர் ஒரு தலையாக காதலித்து உள்ளார். அவரது காதலை ஏற்க அந்த மாணவி மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
இதில் பலத்த தீக்காயமடைந்த அந்த மாணவி, மீட்கப்பட்டு முதலில் புலோ ஜனோ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின்னர், ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று உயிரிழந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் ஆத்திரமடைந்து, தும்கா நகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தும்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆம்பர் லக்டா கூறும்போது, குற்றவாளியான ஷாருக் என்பவரை கைது செய்துள்ளோம். விரைவாக விசாரணை நடத்துவதற்காக விரைவு நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்வோம் என அவர் கூறியுள்ளார்.
எங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். அமைதி காக்கும்படி நாங்கள் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். நிலைமை சீராக உள்ளது. அந்த பகுதியில் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது என கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் சுகாதார மந்திரி பன்னா குப்தா கூறும்போது, குற்றவாளிகளுக்கு எதிராக விரைவான விசாரணை நடைபெறும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.