'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக டெல்லியில் ராம்நாத் கோவிந்துடன், அமித்ஷா சந்திப்பு


ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக டெல்லியில் ராம்நாத் கோவிந்துடன், அமித்ஷா சந்திப்பு
x

‘ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக டெல்லியில் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ந்தேதி அமைக்கப்பட்ட இந்த குழுவில், உள்துறை மந்திரி அமித்ஷா, மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே, 15-வது நிதி ஆணைய தலைவர் என்.கே.சிங், மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும் இக்குழுவில் எதிர்க்கட்சி சார்பில் மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடம்பெற மறுப்பு தெரிவித்து விட்டார். இதனைத் தொடர்ந்து குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் ஆகியோர் டெல்லியில் உள்ள ராம்நாத் கோவிந்த் இல்லத்துக்குச் சென்று 'ஒரே நாடு ஒரே தேர்தல்" தொடர்பாக பல விஷயங்களை ஆலோசித்ததாக தெரிகிறது.

இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அரசு வட்டாரங்களில் கூறப்பட்டாலும், குழுவின் முதல் கூட்டத்தை எங்கே? எப்போது நடத்துவது? என்பது குறித்து அவர்கள் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story