வருகிற 28-ந்தேதி தொட்டபள்ளாபுராவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசின் ஓராண்டு சாதனை மாநாடு; மந்திரி சுதாகர் பேட்டி


வருகிற 28-ந்தேதி தொட்டபள்ளாபுராவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசின் ஓராண்டு சாதனை மாநாடு; மந்திரி சுதாகர் பேட்டி
x

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசின் ஓராண்டு சாதனை மாநாடு வருகிற 28-ந்தேதி தொட்டபள்ளாபுராவில் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு:

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உறுப்புகள் தானம்

நாளை (இன்று) உலக உடல் உறுப்புகள் தான தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று (சனிக்கிழமை) பெங்களூரு மேக்ரி சர்க்கிளில் இருந்து சுதந்திர பூங்கா வரை உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்பணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். அதைத்தொடர்ந்து உடல் உறுப்புகள் தான தின விழா பெங்களூரு விதான சவுதாவில் நடக்கிறது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொள்கிறார்.

அந்த விழாவில் முதல்-மந்திரி தனது உறுப்புகளை தானம் செய்யும் அறிவிப்பை வெளியிடுகிறார். நானும், சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுப்புகள் தானம் செய்வதற்கான படிவத்தில் கையெழுத்திட உள்ளோம். நமது நாட்டில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறக்கிறார்கள். இதில் உறுப்புகளை தானம் செய்வோரின் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூட கிடையாது. ஸ்பெயின் நாட்டில் உறுப்புகள் தானம் செய்வோர் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்ளது.

சாதனை விளக்க மாநாடு

சில சமூக விஷயங்களும் உறுப்புனர்கள் தானத்திற்கு இடையூறாக உள்ளன. கர்நாடகத்தில் நிமான்ஸ், பவுரிங் ஆஸ்பத்திரிகளில் மட்டுமே உறுப்புகள் தானம் செய்யும் மையங்கள் இருந்தன. இப்போது அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் உறுப்புகள் தானமாக பெறும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் மட்டும் 18 உறுப்பு தான மையங்கள் இருக்கின்றன.

பசவராஜ் பொம்மை தலைமையிலான ஓராண்டு சாதனை விளக்க மாநாடு கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. பிரவீன் நெட்டார் கொலையால் அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. இப்போது அந்த மாநாட்டை வருகிற 28-ந் தேதி தொட்டபள்ளாப்புராவில் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story