கடை முன் கம்பம் நட எதிர்ப்பு; பெண்ணை அறைந்து, தாக்கிய கட்சி தலைவர்: வைரலான வீடியோ


கடை முன் கம்பம் நட எதிர்ப்பு; பெண்ணை அறைந்து, தாக்கிய கட்சி தலைவர்:  வைரலான வீடியோ
x
தினத்தந்தி 1 Sept 2022 7:04 PM IST (Updated: 1 Sept 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் தனது கடை முன் கட்சி கம்பம் நட எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை மராட்டிய நவநிர்மாண் சேனா உள்ளூர் தலைவர் கன்னத்தில் அறைந்து, தாக்கிய வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.



புனே,



மராட்டியத்தில் சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ராஜ் தாக்கரே தனியாக மராட்டிய நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மராட்டியத்தின் மும்பை நகரில் பிரசித்தி பெற்ற மும்பா தேவி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் அமைந்த பகுதியில் பல கடைகளும் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் அந்த பகுதியில் கட்சியின் விளம்பர பலகை வைப்பதற்காக கம்பம் ஒன்றை நடுவதற்காக வந்துள்ளனர்.

அவர்கள் இடம் தேடி, இறுதியாக மருந்து கடை ஒன்றின் முன்னால் சென்று கம்பம் நட முயற்சித்து உள்ளனர். அந்த கடையின் பெண் உரிமையாளரான பிரகாஷ் தேவி என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

வேறு எங்காவது சென்று கம்பம் நடுங்கள் என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அக்கட்சியின் உள்ளூர் தலைவரான வினோத் ஆர்கிலே, அந்த பெண்ணை அடித்தும், இழுத்து கீழே தள்ளி விட்டும் உள்ளார். இந்த காட்சிகள் வீடியோவாக வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன.

எனினும், தனது முடிவில் அந்த பெண் உறுதியாக இருந்துள்ளார். சிலர் அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியாக அந்நபரை தடுத்து உள்ளனர். எனினும், தொடர்ச்சியாக பெண்ணின் கன்னத்தில் அறைந்தும், தள்ளி விட்டும் வினோத் தாக்குதல் நடத்தி உள்ளார்.

சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்பு போலீசில் தேவி நேற்று புகார் அளித்து உள்ளார். அக்கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதுடன், சிலர் தகாத வார்த்தைகளால் பேசவும் செய்தனர் என தேவி புகாராக கூறியுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்.









Next Story