ஒடிசா: தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு; 4.67 லட்சம் மக்கள் பாதிப்பு
ஒடிசாவின் வடகடலோர 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புவனேஷ்வர்,
மகாநதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பௌத், நயாகடா, சுபர்னாபூர், கட்டாக், கேந்திரபாடா மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிராகுட் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இதுகுறித்து உயரதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, ' ஒடிசாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 757 கிராமங்களில் உள்ள சுமார் 4.67 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 425 கிராமங்களில் உள்ள 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கிக் தவிக்கின்றனர்.
அதிக வெள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து உடனடியாக மக்களை வெளியேற்ற மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஒடிசாவின் வடகடலோர 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.