ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பி.ஏ.எப்.எப். இயக்கத்திற்கு அரசு தடை


ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பி.ஏ.எப்.எப். இயக்கத்திற்கு அரசு தடை
x

நாட்டில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய மக்கள் பாசிச ஒழிப்பு முன்னணி இயக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.



புதுடெல்லி,


ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த ஆண்டு மத்தியில் காஷ்மீரி பண்டிட்டுகள் மீது பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல் தொடர்ந்தது. அவர்களில் பலர் சுட்டு கொல்லப்பட்டனர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின்பு, 2022-ம் ஆண்டில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

வேறு இடங்களில் இருந்து காஷ்மீருக்கு புலம்பெயர்ந்து வரும் பணியாளர்கள், மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடரும் என பயங்கரவாதிகள் பகிரங்க அறிவிப்பும் வெளியிட்டனர்.

இதன்பின்பு, பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த சூழலில், நாட்டில் தடை செய்யப்பட்டு உள்ள ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய மக்கள் பாசிச ஒழிப்பு முன்னணி இயக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் வெளியுலகிற்கு தெரிய வந்தன. இந்த தடை பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் பாதுகாப்பு படைகள், அரசியல் தலைவர்கள், வேறு மாநிலங்களில் இருந்து வந்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் பணிபுரிந்து வரும் குடிமக்களுக்கு தொடர்ந்து இந்த அமைப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த அமைப்பு, பிற அமைப்புகளுடன் இணைந்து கொண்டு இந்தியாவின் காஷ்மீர் மற்றும் பிற பெரிய நகரங்கள் மீது கொடூர பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கான சதிதிட்டம் தீட்டி செயல்படுத்துவதுடன், சமூக ஊடகம் வழியே அதற்கான திட்டங்களில் தொடர்பு கொண்டுள்ளது.

துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகளை கையாள்வதற்கான பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளித்து, அவர்களை பயங்கரவாத பணியில் சேர்க்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது என தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் பங்கேற்றுள்ள மக்கள் பாசிச ஒழிப்பு முன்னணி இயக்கத்திற்கு, சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம், 1967 எனப்படும் உபா சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அல்-கொய்தா மற்றும் பிற சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் ஈடுபட்டவர் என்ற அடிப்படையில், அகமது அஹாங்கர் என்ற அபு உஸ்மான் அல்-காஷ்மீரி என்பவருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்தது.

சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அகமது அஹாங்கர் என்ற அபு உஸ்மான் அல்-காஷ்மீரி என்பவர் பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருந்தது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது உள்ள அவர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் 1974-ம் ஆண்டு பிறந்தவர். இந்தியாவில் காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் உள்பட பலரை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ளவர்களை ஐ.எஸ். அமைப்பில் சேர்க்கும் பணிக்கான தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தியாவை மையம் ஆக கொண்டு, ஆன்லைன் வழியேயான ஐ.எஸ்.ஐ.எஸ். பிரசார பணிக்கான வேலைகளில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார் என அறிக்கை தெரிவிக்கின்றது.

இவரை 2 தசாப்தங்களுக்கும் கூடுதலாக தேடப்படும் பயங்கரவாதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. சட்டவிரோத வகையில், இவரது ஐ.எஸ். அமைப்புக்கு தேவையான நபர்களை, காஷ்மீரில் இருந்து தேர்வு செய்து உள்ளே இழுக்கும் வேலையை அவர் திறம்பட மேற்கொண்டு வந்துள்ளார்.


Next Story