பேரழிவு ஆயுதங்களுக்கு நிதியுதவி வழங்க தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் சொத்துகள் மற்றும் பொருளாதார வளங்களை முடக்க மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
புதுடெல்லி,
பேரழிவு ஆயுதங்களுக்கு நிதியுதவி வழங்குவதைத் தடை செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, பேரழிவு ஆயுதங்களுக்கு நிதியுதவி வழங்குவதைத் தடை செய்ய முற்படும் இந்த மசோதா, அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் நிதிச் சொத்துகள் மற்றும் பொருளாதார வளங்களை முடக்கவோ, பறிமுதல் செய்யவோ அல்லது இணைக்கவோ மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
பாரிய அழிவுக்கான ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைமைகள் (சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் தடை) திருத்த மசோதா, 2022, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரால் முன்மொழியப்பட்டது.
2005 இல் நிறைவேற்றப்பட்ட பாரிய அழிவுக்கான ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைமைகள் (சட்டவிரோத செயல்பாடுகளின் தடை) சட்டம், பேரழிவு ஆயுதங்களை தயாரிப்பதை மட்டுமே தடை செய்தது. இதனால் புதிய சட்டதிருத்தம் அவசியம் என்று முன்மொழியப்பட்டது.
"தற்போதைய சட்டம் வர்த்தகத்தை மட்டுமே உள்ளடக்கியது என்றும் பேரழிவு ஆயுதங்களுக்கு நிதியுதவி செய்வதை உள்ளடக்காது என்றும் இதனால் புதிய சட்டதிருத்தம் அவசியம். இது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லது. இது நாட்டின் நற்பெயருக்கு நல்லது" என்று ஜெய்சங்கர் கூறினார்.
முன்னதாக, இந்த மசோதா ஏப்ரல் மாதம் மக்களவையில் எற்கெனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டது.
பணமோசடி வழக்கில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனிடையே இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.