எல்லை பிரச்சினையில் கர்நாடக சட்டசபையில் மராட்டியத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்


எல்லை பிரச்சினையில் கர்நாடக சட்டசபையில் மராட்டியத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்
x

எல்லை பிரச்சினையில் கர்நாடக சட்டசபையில் மராட்டியத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெங்களூரு:

எல்லை பிரச்சினை

கர்நாடகம்-மராட்டியம் இடையே பெலகாவி எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. பெலகாவி தங்களுக்கே சொந்தம் என்று மராட்டியம் கூறி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இரு மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை குறித்து மோதல் வெடித்தது. இதையடுத்து மராட்டியத்தில் கர்நாடக வாகனங்கள் மீதும், கா்நாடகத்தில் மராட்டிய வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் பெலகாவியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. உள்துறை மந்திரி அமித்ஷா இரு மாநில முதல்-மந்திரிகளையும் அழைத்து பேசி, நல்லிணக்கத்தை காக்கும்படி உத்தரவிட்டார். இந்த நிலையில் பெலகாவியில் தொடங்கியுள்ள கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் எல்லை பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பதிலளித்தார். அதைத்தொடர்ந்து மராட்டிய மாநிலத்தை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக பசவராஜ் பொம்மை பேசும்போது கூறியதாவது:-

நல்லிணக்கம்

கர்நாடகத்தில் இருக்கும் பெலகாவியை மராட்டிய மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதையடுத்து கடந்த 1967-ம் ஆண்டு மத்திய அரசு மகாஜன் குழுவை அமைத்தது. அந்த குழு வழங்கிய அறிக்கையை அம்மாநிலம் நிராகரித்துவிட்டது. அந்த குழு அறிக்கை வழங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இரு மாநில மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த எல்லை பிரச்சினை முடிந்துபோன அத்தியாயம். ஆனால் மராட்டியம் கடந்த 2004-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அதே நேரத்தில் இரு மாநிலங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வேலையை மராட்டியம் செய்து வருகிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

மாநிலத்தின் நலன்

மராட்டியத்தின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறவில்லை. எல்லை பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. கர்நாடக அரசு எல்லை மற்றும் ஆறுகள் பாதுகாப்பு ஆணையத்தை ஏற்கனவே அமைத்தது. அந்த ஆணையம் அரசுக்கு தொடர்ந்து ஆலோசனை கூறி வருகிறது. அந்த ஆணையத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பட்டீலை நியமித்துள்ளோம்.

மேலும் மராட்டியம் தொடர்ந்துள்ள வழக்கில் கர்நாடகம் சார்பில் ஆஜராக மூத்த வக்கீல் முகுல் ரோத்தகியை நியமித்துள்ளோம். கர்நாடகத்தின் நிலம், நீர் உள்ளிட்ட விஷயங்களில் நமது மாநிலத்தின் நலனை காக்க அரசு உறுதியாக உள்ளது. சமீபத்தில் எல்லை பிரச்சினையில் மராட்டிய மாநில அரசியல்வாதிகள் கூறும் கருத்துகள் கண்டனத்திற்கு உட்பட்டவை.

சமரசம் இல்லை

இந்த பதற்றமான சூழலில் மராட்டிய மந்திரிகள் கர்நாடகத்திற்கு வந்து பிரச்சினையை மேலும் தூண்டிவிட முயற்சி செய்தனர். இதையும் கண்டிக்கிறேன். உள்துறை மந்திரி அமித்ஷா இரு மாநில முதல்-மந்திரிகளையும் அழைத்து, நல்லிணக்கத்தை காப்பாற்றும்படி உத்தரவிட்டுள்ளார். கர்நாடகத்தில் நிலம், நீர், மொழி மற்றும் கன்னடர்களின் நலனை காப்பதில் சமரசத்திற்கு இடமே இல்லை.

இந்த விஷயத்தில் கர்நாடக மக்கள் அனைவரின் உணர்வும் ஒன்றே. இதற்கு பாதிப்பு ஏற்படும்போது அனைவரும் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நமது நலனை காக்க அரசு சட்ட ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது. மராட்டிய மாநிலம் தற்போது தேவையின்றி உருவாக்கியுள்ள விவகாரத்தை கண்டித்து இந்த சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற கோருகிறேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்த தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சியினரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.


Next Story