பெங்களூருவில் பயங்கரம் கால்சென்டர் பெண் ஊழியர்- மகன் குத்திக் கொலை


பெங்களூருவில் பயங்கரம் கால்சென்டர் பெண் ஊழியர்- மகன் குத்திக் கொலை
x
தினத்தந்தி 6 Sep 2023 6:45 PM GMT (Updated: 6 Sep 2023 6:46 PM GMT)

பெங்களூருவில் வீடு புகுந்து கால்சென்டர் பெண் ஊழியர், மகனை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. குடும்ப பிரச்சினையால் பிரிந்து வாழ்ந்த கணவர் தீர்த்து கட்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு

தாய், மகன் கொலை

பெங்களூரு பாகலகுன்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரவீந்திரநாத் நகரில் வசித்து வந்தவர் நவநீதா (வயது 35). இவரது மகன் சுஜன் (8). நவநீதாவின் கணவர் பெயர் சந்திரா (38) ஆகும். நவநீதா ஒரு கால்சென்டர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, தனது கணவர் சந்திராவுடன் வாழ பிடிக்காமல் நவநீதா பிரிந்து விட்டார். கடந்த 2 ஆண்டுகளாக ரவீந்திரநாத் நகரில் தன்னுடைய மகன் சுஜனுடன் நவநீதா தனியாக வசித்து வந்தார்.

நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மகனுடன் அவர் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த மர்மநபர் நவநீதாவை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது மகன் சுஜனின் கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாக தெரிகிறது.

கணவர் தீர்த்து கட்டினாரா?

நள்ளிரவில் நவநீதாவின் தாய், மகளின் வீட்டுக்கு வந்த போது மகள் மற்றும் பேரன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்ததும் பாகலகுன்டே போலீசார் விரைந்து வந்து நவநீதா, அவரது மகனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது நவநீதாவை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்ததும், சுஜனை கழுத்தை நெரித்து கொன்றதும் தெரியவந்தது. மேலும் நவநீதா, அவரது மகனை சந்திராவே கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக தன்னை பிரிந்து மகனுடன் நவநீதா வசித்து வந்ததால், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு சென்ற சந்திரா மனைவியுடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியும், மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டும் தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இருப்பினும் வேறு யாரும் தாய், மகனை கொலை செய்தார்களா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வலைவீச்சு

இதுகுறித்து பாகலகுன்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள சந்திராவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். தாய், மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story