புதிய வகை கொரோனா பரவலால் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம்
புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பெங்களூருவில் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருவது தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
கொரோனா பரவல் பீதி
சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சமீபமாக 'பி.எப்.-7' என்ற புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதுடன், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால் இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் பீதி உருவாகி உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவுறுத்தி உள்ளார். பெங்களூரு மாநகராட்சி சார்பிலும் பூஸ்டர் தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, பெங்களூருவில் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை...
அதன்படி, பெங்களூருவில் கடந்த 23-ந்தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 16,840 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதாவது டிசம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 5,216 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டு இருந்தனர். ஆனால் கடந்த 23-ந்தேதியில் இருந்து தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நவம்பர் மாதத்தில் ஒட்டு மொத்தமாக 15,081 பேர்மட்டுமே தடுப்பூசி போட்டு இருந்தனர்.
ஒட்டு மொத்தமாக கடந்த 52 நாட்களை ஒப்பிடுகையில், கடந்த 6 நாட்களில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த 23-ந் தேதி 1,377 பேரும், 24-ந் தேதி 3,207 பேரும், 25-ந் தேதி 4,480 பேரும், 26-ந் தேதி 1,372 பேரும், கடந்த 27-ந் தேதி 3,394 பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு
இருப்பது தெரியவந்துள்ளது.