கிராமத்தை காலி செய்து செல்லும் மக்கள்
எம்.எல்.ஏ.வை தாக்கியதால் போலீஸ் இடையூறு செய்ததாக கிராமத்தை பொதுமக்கள் காலி செய்துவிட்டு செல்கின்றனர்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா குந்தூர் அருகே ஹாலஹள்ளியை சேர்ந்தவர் ஷோபா. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, காட்டுயானை வந்து தாக்கி கொன்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்களிடையே பீதி ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் அஞ்சலி செலுத்த வந்த எம்.எல்.ஏ. குமாரசாமியை தாக்கினர். இதையடுத்து அந்த பகுதிக்கு யாரும் செல்லவில்லை. போலீசார் மற்றும் வனத்துறையினர் மட்டும் அவ்வப்போது சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை அரசு சார்பில் எந்த நிவாரணத்தொகையும் வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் சிலர் இந்த ஊரில் இருந்த பிழைக்க முடியாது என்று கூறி பெங்களூருவிற்கு இடம் பெயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருக்கும் மக்களும் யானைகளுக்கு பயந்து வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் எம்.எல்.ஏ. தாக்குதல் வழக்கில் 10 பேரை கைது செய்த போலீசார் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் கிராமத்தை காலி செய்து செல்கிறார்கள். மேலும் பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் பைராபுரா, ஹாலஹள்ளி கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.