கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோட்சே புகைப்படத்துடன் பேனர் வைப்பு; எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம்


கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோட்சே புகைப்படத்துடன் பேனர் வைப்பு;  எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம்
x

மங்களூரு அருகே சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் கிருஷ்ணஜெயந்தியையொட்டி கோட்சே புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட்டது. பின்னர் எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றப் பட்டது.

மங்களூரு;

கிருஷ்ணஜெயந்தி

கர்நாடகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள, ஸ்ரீராமசேனை மற்றும் பா.ஜனதாவினரால் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டது. அதேபோல் தட்சிண கன்னடா மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டது.

இதில் குறிப்பாக மங்களூரு அருகே இந்துக்கள் அதிகம் வாழும் சூரத்கல், பைக்கம்பாடி, கூளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

கோட்சே புகைப்படம்

அதில் அகில பாரத இந்து மகாசபை சார்பிலும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதில் சில பேனர்கள் அகில பாரத இந்து மகாசபையின் மாநில தலைவர் ராஜேஷ் பவித்ரன் சார்பில் வைக்கப்பட்டது. அந்த பேனர்களில் வீரசாவர்க்கர் மற்றும் நாதுராம் கோட்சேவின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோட்சேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த பேனர்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

பரபரப்பு

மேலும் அந்த பேனரில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியலை இந்து மயமாக்குங்கள், இந்துக்களை ராணுவ மயமாக்குங்கள்' என்று கன்னடத்தில் எழுதப்பட்டு இருந்தது.

இந்த பேனரை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அந்த போஸ்டர் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் எதிர்ப்பு கிளம்பியதால் பேனர் அகற்றப்பட்டது.


Next Story