நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு விண்கலம் அனுப்ப திட்டம் - இஸ்ரோ தகவல்


நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு விண்கலம் அனுப்ப திட்டம் - இஸ்ரோ தகவல்
x

கோப்புப்படம்

நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு இஸ்ரோவின் விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேராடூன்,

இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்புவது தொடர்பான திட்டப்பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்களை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 'ஆகாஷ் தத்வா மாநாடு' நடைபெற்றது. இதில் பங்கேற்ற அலகாபாத் சார்பு இயற்பியல் ஆய்வகத்தின் இயக்குனர் அனில் பரத்வாஜ், இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் குறித்து விளக்கினார்.

அப்போது அவர் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு இஸ்ரோவின் விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின்படி, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட ரோவர் மற்றும் லேண்டர் கருவிகளை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

சூரிய வெளிச்சமே இல்லாத நிரந்தர இருளைக் கொண்ட நிலவின் மறுபக்கத்தைக் குறித்து ஆய்வு செய்ய இந்த திட்டம் உதவும் என்று தெரிவித்த அவர், இந்த திட்டம் நிறைவேறினால் நிலவு ஆரய்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் கண்டறியப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story