2 பேரை கொல்ல திட்டமிட்ட பெங்களூருவை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது
2 பேரை கொல்ல திட்டமிட்ட பெங்களூருவை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை கஞ்சா கடத்தல் வழக்கிலும் சிக்க வைக்க முயன்றது தெரியவந்தது.
சிவமொக்கா;
கொலை செய்ய திட்டம்
கேரளாவை சேர்ந்தவர்கள் அஜீல், சஜ்ஜூ. இவர்களுக்கும் சிவமொக்கா வினோபா நகரை சேர்ந்த நிசார், பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்த அலெக்ஸ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால், அவர்கள் 2 பேரையும் கொலை செய்ய நிசார் மற்றும் அலெக்ஸ் முடிவு செய்தனர்.
இதற்காக பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் வசித்து வரும் கூலிப்படையை சேர்ந்த அப்ரோஸ் என்பவரிடம் பணம் கொடுத்து அஜீல் மற்றும் சஜ்ஜூவை கொலை செய்ய திட்டமிட்டனர். மேலும் அவர்களை கொலை செய்துவிட்டு விபத்தில் இறந்தது போல் வழக்கை ஜோடிக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
3 பேர் கைது
இதுபற்றி அறிந்ததும் அஜீல் மற்றும் சஜ்ஜூ ஆகியோர் தீர்த்தஹள்ளி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிசார், அலெக்ஸ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த அப்ரோஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அஜீல் மற்றும் சஜ்ஜூவை கொலை செய்ய திட்டமிட்ட 2 பேரும், அவர்களை கஞ்சா கடத்தல் வழக்கில் போலீசில் சிக்க வைக்க முயன்றதும் தெரியவந்தது. கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.