'வந்தே பாரத்' ரெயில் விடுமாறு நாடு முழுவதும் கேட்கிறார்கள்- பிரதமர் மோடி


வந்தே பாரத் ரெயில் விடுமாறு நாடு முழுவதும் கேட்கிறார்கள்- பிரதமர் மோடி
x

நடுத்தர மக்களுக்கு வசதியான பயணத்தை வந்தே பாரத் ரெயில் அளிக்கிறது. அதை தங்கள் பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்துமாறு நாடு முழுவதும் கேட்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

அடிமை மனப்பான்மை

பிரதமர் மோடி நேற்று சத்தீஷ்கார் மாநில பயணத்தை முடித்துக்கொண்டு, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு சென்றார். அங்கு கீதா பிரஸ் என்ற பதிப்பகத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது:-

அடிமை மனப்பான்மையில் இருந்து விடுபட்டு, நமது பாரம்பரியத்தில் பெருமை கொள்ளும் நேரம் வந்து விட்டது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் கடற்படையின் இலச்சினை, அடிமைத்தனத்தின் அடையாளமாக இருந்தது. அதை இப்போது மாற்றி விட்டோம். அதுபோல், ராஜபாதையின் பெயர் 'கடமை பாதை' என்று மாற்றப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளுக்கு பிறகு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கனவு நிறைவேறி இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

வந்தே பாரத் ரெயில்

பின்னர், பிரதமர் மோடி கோரக்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர் தொடங்கி வைக்க இருந்த 'வந்தே பாரத்' ரெயிலில் ஏறி அதில் உள்ள வசதிகளை பார்த்தார். அங்கு அமர்ந்திருந்த 34 பள்ளி குழந்தைகளுடன் உரையாடினார். பின்னர், அங்கு நடந்த விழாவில், கோரக்பூரில் இருந்து அயோத்தி வழியாக லக்னோ செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அதிவேக ரெயில் காரணமாக, பயண நேரம் 2½ மணி நேரம் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் (சபர்மதி) செல்லும் மற்றொரு வந்தே பாரத் ரெயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், ரூ.498 கோடி செலவில், கோரக்பூர் ரெயில் நிலையத்தை மறுசீரமைக்கும் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது, பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் கோரிக்கை

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

எனது கோரக்பூர் பயணத்தில், வளர்ச்சியும், பாரம்பரியமும் ஒருசேர அமைந்து விட்டது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம், தங்கள் பகுதி ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்ல வேண்டும் என்று தலைவர்கள் கடிதம் எழுதுவார்கள். ஆனால், இப்போது, தங்கள் பகுதிக்கு வந்தே பாரத் ரெயிலை அறிமுகப்படுத்துமாறு நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் எனக்கு கடிதம் வருகிறது. அந்த அளவுக்கு நடுத்தர மக்களுக்கு வசதிகளையும், சவுகரியத்தையும் அளிக்கும் ரெயிலாக 'வந்தே பாரத்' திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

வாரணாசிக்கு ரூ.12 ஆயிரம் கோடி

பின்னர், பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றார். அங்கு ரூ.12 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான 29 வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

அவற்றில், சரக்கு ரெயில் வழித்தடத்தில், ரூ.6 ஆயிரத்து 760 கோடி மதிப்பிலான ரெயில் பாதைப்பிரிவும் அடங்கும்.


Next Story