விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி - பிசிசிஐ தகவல்


விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி - பிசிசிஐ தகவல்
x

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி, அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட், நேற்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது.

இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானதை அறிந்து வேதனை அடைந்தேன், அவரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, ரிஷப் பண்ட்டின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பிரதமர் நரேந்திரமோடி, ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரை அழைத்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். பிரதமரின் இந்தச் செய்கைக்கும் அவரது ஆறுதலான உறுதிமொழிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.


Next Story