குஜராத்தில் ரூ.4,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி


குஜராத்தில் ரூ.4,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 28 Aug 2022 2:55 PM IST (Updated: 28 Aug 2022 3:27 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி குஜராத்தின் பூஜ் நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.



பூஜ்,



குஜராத்தின் பூஜ் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரியில் நாட்டின் 52-வது குடியரசு தினத்தன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை நிலைகுலைய செய்தது. 2 நிமிடங்களே நீடித்த இந்நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட விளைவுகள் கற்பனை செய்து பார்க்க முடியாதவை.

இதில் 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலும் கூட உணரப்பட்டது. நாட்டின் 70 சதவீத பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

குஜராத்தில் உள்ள 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், பல வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அடியோடு சரிந்தன. நிலநடுக்கத்திற்கு பின்னரும் 600 முறை 2.8 முதல் 5.9 வரையிலான ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் நீடித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தின.

இந்த நிலநடுக்க பாதிப்பின் நினைவாக குஜராத்தின் பூஜ் பகுதியில் ஸ்மிரிதிவன்-2001 நிலநடுக்க நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்பின் பிரதமர் மோடி குஜராத்தின் பூஜ் நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். இதன்பின் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட நாட்களை நினைத்து பார்க்கிறேன்.

2-வது நாளும் நான் இந்த பகுதிக்கு வந்தேன். அப்போது நான் முதல்-மந்திரியாக இருக்கவில்லை. ஒரு தொண்டனாகவே இருந்தேன். என்னால் எத்தனை பேரை காப்பாற்ற முடியும் என எனக்கு தெரியாது. ஆனால், உங்கள் அனைவருடனும் இருக்க வேண்டும் என நான் முடிவு செய்தேன் என கூறியுள்ளார்.

2001 நிலநடுக்கத்திற்கு பின்பு கட்ச் மாவட்டம் பாதிப்பு நிலையில் இருந்து மீள முடியாது என பலர் கூறினர். ஆனால் இந்த பகுதி மக்கள் அந்த காட்சியை மாற்றியிருக்கின்றனர். குஜராத்தில் முதலீடுகளை மேற்கொள்ள விடாமல் அதனை தடுப்பதற்கான சதிதிட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், வளம் அடைவதற்கான ஒரு புதிய வழியை குஜராத் தேர்ந்தெடுத்தது என அவர் பேசியுள்ளார்.


Next Story