சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி...!
சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி உலக தலைவர்கள் பலரும் இந்தியாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் ஜோபைடன், ரஷிய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அன்டோனியோ அல்பனேஷ் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தநிலையில் சுதந்திர அமிர்த பெருவிழாவாக 75-வது சுதந்திர தினத்தை சிறப்பித்த அனைவருக்கும் தமது வாழ்த்துக்களையும், நன்றியையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் திரு அன்டோனியோ அல்பனேஷ் வாழ்த்து தெரிவித்து அனுப்பிய டுவிட்டர் செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நட்புறவு நீண்டகாலம் சிறப்பாக இருந்து வருவதாகவும், இருதரப்பு மக்களுமே இதனால் பெரிய அளவில் பயன்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாலத்தீவு அதிபர் திரு இப்ராஹிம் முகமது சோலிக் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர், இந்தியா – மாலத்தீவு உடனான நட்புறவுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தங்களின் வாழ்த்து அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கும் தமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மெக்ரான் அனுப்பிய சுதந்திர தின வாழ்த்துச்செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி,
பிரான்ஸ் உடனான நெருங்கிய நட்புறவு குறித்து இந்தியா பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார். உலக அளவில் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு சிறப்பான வகையில் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பூட்டான் பிரதமர் லோட்டே ட்ஷெரிங் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி,
அண்டை நாடான பூட்டானின் நட்புறவு சிறப்பு மிக்கது என்று கூறியுள்ளார். அனைத்து இந்திய மக்களுக்கும், பூட்டான் மக்களுக்கும் இடையிலான நட்புறவு பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
காமன்வெல்த் நாடான டோமினிக்கா நாட்டின் பிரதமர் திரு ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் அனுப்பிய வாழ்த்துக்கு பதிலளித்துள்ள பிரதமர், டோமினிக்கா உடனான நட்புறவு வரும் ஆண்டுகளிலும் சிறப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.
மொரிஷியஸ் பிரதமர் திரு பிரவீந்த் குமார் ஜூகுனாத் அனுப்பியுள்ள சுதந்திர தின வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, மொரிஷியஸ் உடனான கலாச்சார நட்புறவு நீண்ட நாட்கள் தொடரும் என்று கூறியுள்ளார்.
மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரி ராஜாலினா அனுப்பியுள்ள வாழ்த்துக்கு, நன்றி தெரிவித்துள்ள பிரதமர், நம்பிக்கை மிகுந்த நாடாக மடகாஸ்கர் திகழ்வதாகவும், இந்திய மக்களின் நலனுக்காக அந்நாடு செயல்பட்டு வருவது மிகுந்த பெருமை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள நரேந்திர மோடி, வரும் ஆண்டுகளிலும் இந்தியா – நேபாளம் இடையிலான நட்புறவு சிறப்பாக அமைய வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தின வாழ்த்துக்களுக்கு நன்றி பிரதமர் யாயிர் லாபிட். இந்தியா மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு இடையே உள்ள ஆழமான பிணைப்பில் நான் உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன்.
இந்த நட்பு வரும் ஆண்டுகளில் அதிவேகமாக வளரும் என்று நான் நம்புகிறேன் என்று இஸ்ரேல் பிரதமருக்கு பதிலளித்த மோடி ட்வீட் செய்துள்ளார்.
இஸ்ரேல் முன்னாள் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவும் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவை எடுத்துக்காட்டும் வீடியோ செய்தியுடன் வாழ்த்து தெரிவித்தார்.
நெதன்யாகுவுக்குப் பதிலளித்த மோடி, "வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நெதன்யாகு . நமது நாடுகளுக்கிடையேயான நட்பும் சகோதரத்துவமும் இப்படியே தொடருட்டும், நமது உறவுகள் புதிய உயரங்களைத் தொடரட்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.