ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரூ.26 ஆயிரம் கோடி வளர்ச்சி திட்டப்பணிகள்


ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரூ.26 ஆயிரம் கோடி வளர்ச்சி திட்டப்பணிகள்
x

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரூ.26 ஆயிரம் கோடி வளர்ச்சித்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது அவர், உலகின் எதிர்பார்ப்பு மையமாக இந்தியா மாறி இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

ரூ.15,233 கோடி வளர்ச்சித்திட்டங்கள்

பிரதமர் மோடி ஆந்திர மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் 2-வது நாளான நேற்று அவர், விசாகப்பட்டினத்தில் ரூ.15 ஆயிரத்து 233 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு, அந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசினார்.

அவர் தொடங்கி வைத்த முக்கிய திட்டங்கள்:-

* ரூ.2,917 கோடி மதிப்பிலான ஓ.என்.ஜி.சி. திட்டம். இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு சுமார் 30 லட்சம் கன மீட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆழமான எரிவாயு கண்டுபிடிப்பு திட்டம் ஆகும்.

* ஸ்ரீகாகுளம்-கஜபதி வழித்தடத்தின் ஒரு பகுதியாக ரூ.211 கோடி செலவில் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை- '326 ஏ'யின் 39 கி.மீ நீளமுள்ள நரசன்னபேட்டா- பாதப்பட்டினம் வரையிலான சாலை நாட்டுக்கு அர்ப்பணம்

* ரூ.3,778 கோடி செலவில் கட்டப்படவுள்ள 100 கி.மீ நீள அணுகல் 6 வழிச்சாலைக்கு அடிக்கல். இது ராய்பூர்-விசாகப்பட்டினம் பொருளாதார வழித்தடத்தில் அமைகிறது. இந்த பொருளாதார வழித்தடம், சத்தீஷ்கார் மற்றும் ஒடிசாவின் பல்வேறு தொழில் முனைகளுக்கு இடையே விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் சென்னைக்கு விரைவான இணைப்பை வழங்கும்.

* ரூ.566 கோடியில் அர்ப்பணிக்கப்பட்ட துறைமுக சாலை, விசாகப்பட்டினத்தில் கான்வென்ட் சந்திப்பில் இருந்து ஷீலாநகர் சந்திப்பு வரை அமைக்கப்படுகுறது.

* ரூ.2,650 கோடியில் 745 கி.மீ. நீளத்தில் ஸ்ரீகாகுளம் ஏங்கல் இயற்கை எரிவாயு குழாய்வழி திட்டத்துக்கு அடிக்கல்.

பிரதம மந்திரி கதி திட்டம்

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-

பிரதம மந்திரி கதி சக்தி திட்டம், நமது நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தியதோடு மட்டுமின்றி, செலவுகளையும் குறைத்துள்ளது.

உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த பார்வை முதன்மையானது. கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பார்வை நாட்டிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

உலகின் எதிர்பார்ப்பு மையமாக இந்தியா...

உலகின் எதிர்பார்ப்புகளின் மையப் புள்ளியாக இந்தியா மாறி இருக்கிறது. பிரதம மந்திரி கதி சக்தி போன்ற திட்டங்கள் நாட்டிற்கு அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கின்றன.

வினியோக சங்கிலிகள் மற்றும் தளவாடங்கள் பல மாதிரி இணைப்பைச் சார்ந்தது ஆகும். பல மாதிரி போக்குவரத்து அமைப்பு ஒவ்வொரு நகரத்தின் எதிர்காலமாக இருக்கும்.

முதல் முறையாக நீலப்பொருளாதாரம் (கடல்சார் பொருளாதாரம்) நாட்டில் முதன்மையானதாக மாறி இருக்கிறது. துறைமுகம்சார்ந்த வளர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தெலுங்கானாவில் வளர்ச்சி திட்டங்கள்

தெலுங்கானா மாநிலத்தில் ராமகுண்டத்தில் ரூ.10,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

சிங்கரேணி நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி, பல்வேறு அமைப்புகளும், இடதுசாரிக் கட்சிகளும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ராமகுண்டத்தில் பல திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

ராமகுண்டத்தில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்ப்பட்டனர்.


Next Story