நாடாளுமன்ற தேர்தல்: பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்


நாடாளுமன்ற தேர்தல்: பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
x

பா.ஜனதா தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

பா.ஜனதா தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றி அதில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்கிறது. அதில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை தொடர பா.ஜனதா வியூகம் வகுத்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், திரிபுரா, சத்தீஷ்கார் போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கும் வெற்றி பெற பா.ஜனதா காய் நகர்த்தி வருகிறது.

இந்த தேர்தல்களை சந்திப்பது குறித்து ஆலோசிக்க பா.ஜனதா தேசிய நிர்வாகிகள் கூட்டம் இன்றும், நாளையும் டெல்லியில் நடக்கிறது. கட்சி தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்குகிறார்.

தேசிய நிர்வாகிகள் மட்டுமின்றி, மாநில பா.ஜனதா தலைவர்களும், பொதுச்செயலாளர்களும் (அமைப்பு) இதில் பங்கேற்கிறார்கள். சில மத்திய மந்திரிகள் அடங்கிய குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலில் இன்று ஓட்டு போடும் பிரதமர் மோடி, அதைத்தொடர்ந்து டெல்லி செல்கிறார். அங்கு இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுவார் என்று பா.ஜனதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில், தேர்தல்களுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்கப்படும். தேர்தல்களை சந்திப்பதற்காக கட்சியின் அரசியல் செயல் திட்டம் வகுக்கப்படும். ஆண்டு முழுவதும் நடந்த கட்சியின் அமைப்புசார்ந்த பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும். எதிர்கால உத்திகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்த தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story