மராட்டியத்தில் புதிதாக பதவியேற்றுக்கொண்ட மந்திரிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


மராட்டியத்தில் புதிதாக பதவியேற்றுக்கொண்ட மந்திரிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

மராட்டியத்தில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மந்திரி சபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

சிவசேனாவில் பிளவு ஏற்பட்டதால் அக்கட்சி தலைமையில் நடைபெற்று வந்த கூட்டணி அரசு கவிழ்ந்தது. சிவசேனா அதிருப்தியாளர்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றினர். ஜூன் 30-ந் தேதி முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதல்-மந்திரியாக பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிசும் பதவி ஏற்றனர். இருப்பினும் மந்திரி சபை விரிவாக்கம் செய்வதில் தொடர் இழுபறி ஏற்பட்டு வந்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன.

இதற்கு மத்தியில் முதல்-மந்திரி பதவி ஏற்ற பிறகு ஏக்நாத் ஷிண்டே 7 தடவை டெல்லி சென்று திரும்பினார். அந்த தருணத்தின்போது மந்திரி சபை விரிவாக்கம் தொடர்பாக அவர் பா.ஜனதா மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். புதிய அரசு பதவி ஏற்று 40 நாட்களுக்கு பிறகு மராட்டிய மந்திரி சபை இன்று (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட்டது. கவர்னர் மாளிகையில் மதியம் 11 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இன்று புதிதாக 18 அமைச்சர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், மராட்டியத்தின் புதிய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது;- மராட்டிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த குழு, கலவையான நிர்வாக அனுபவம் மற்றும் நல்லாட்சி வழங்கும். மாநில மக்களுக்கு சேவை செய்யவிருக்கும் அமைச்சரவைக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.


Next Story