பஞ்சாபில் பிரதமர் வாகனத்திற்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு: சுப்ரீம் கோர்ட்டில் 5 பேர் கொண்ட குழுவின் அறிக்கை தாக்கல்!


பஞ்சாபில் பிரதமர் வாகனத்திற்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு: சுப்ரீம் கோர்ட்டில் 5 பேர் கொண்ட குழுவின் அறிக்கை தாக்கல்!
x

பிரதமர் மோடி பஞ்சாப் சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டிற்கு மாவட்ட போலீஸ் தான் காரணம் என ஐந்து பேர் கொண்ட குழு குற்றம்சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி கடந்த ஜனவரியில் பஞ்சாப் சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டிற்கு மாவட்ட போலீஸ் கடமை தவறியதே காரணம் என ஐந்து பேர் கொண்ட குழு குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த ஜனவரி 5 ஆம் தேதி, பஞ்சாபில் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற பிரதமர் மோடி செல்லும் வழியில், பெரோஸ்பூரில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் மேம்பாலத்தில் சிக்கித் தவித்தன.

விவசாயிகளின் போராட்டத்தால், பஞ்சாப் மாநிலத்தில் பெரோஸ்பூரில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் கான்வாய் சுமார் 20 நிமிடங்கள் சிக்கிக்கொண்டன. அப்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் போலீசார் எடுக்காததால் சில தனியார் கார்கள் அந்த வழியாக வரத் தொடங்கின. பிரதமர் உட்பட உயர் பதவி வகிப்போரின் வாகனங்கள் செல்லும் வழியே இடையே இவ்வாறு நடப்பது மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறலாகும்.

அதன்பிறகு பிரதமர் மோடி பேரணி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் திரும்பினார். பின்னர், சுப்ரீம் கோர்ட்டு பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் வாகனம் இவ்வாறு முற்றுகையிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையிலான ஐந்து நபர் விசாரணைக் குழு ஒன்றை நியமித்தது.

இந்த குழு, பாதுகாப்பு மீறல் சம்பவம் குறித்து தீர விசாரித்து அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு இன்று வெளியிட்டது.

அந்த அறிக்கையின்படி, பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் கடமையை பஞ்சாப் மாநில பெரோஸ்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர்(எஸ்.எஸ்.பி) முறையாக செய்யவில்லை.

போதுமான கால அவகாசம் இருந்தும், போதுமான பணியாளர்கள் இருந்தும் உரிய நடவடிக்கையை எடுக்க பெரோஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தவறிவிட்டதாகவும் சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமரின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது, இதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகள் மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என ஆலோசனை அளித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க இந்த அறிக்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

முன்னதா, பிரதமர் பாதுகாப்பு மீறல் சம்பவத்தில் ஒன்பது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story