கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி; பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்!


கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு  நலத்திட்ட உதவி; பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்!
x

குழந்தைகளுக்கு கல்வி மற்றும் உதவித்தொகை, 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி, மருத்துவ காப்பீடு முதலியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

புதுடெல்லி,

"குழந்தைகளுக்கான பிரதம மந்திரி நலத் திட்டம் (பி.எம். கேர்ஸ் திட்டம்)" மே 29, 2021 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர்கள் இருவரையோ, அல்லது உயிருடன் இருந்த பெற்றோரில் ஒருவரையோ, அல்லது சட்டரீதியான பாதுகாவலரையோ, அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ, அல்லது தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ மார்ச் 11, 2020 முதல் பிப்ரவரி 28, 2022 வரையிலான காலகட்டத்தில் இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இதற்காக குழந்தைகளை பதிவு செய்வதற்காக http://pmcaresforchildren.in/ என்ற தளம் தொடங்கப்பட்டது. குழந்தைகளின் விரிவான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி மற்றும் உதவித்தொகை மூலம் அவர்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களுக்கு தன்னிறைவு அளிப்பதற்காக 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் முதலியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நல உதவிகளை நாளை, மே 30-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

இந்த திட்டத்தினால் பயனடையும் குழந்தைகள், தங்களது பாதுகாவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் . அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story