விமான நிலையத்திற்கு செல்ல பி.எம்.டி.சி. சொகுசு பஸ்களை பயன்படுத்தும் பயணிகள் அதிகரிப்பு


விமான நிலையத்திற்கு செல்ல பி.எம்.டி.சி. சொகுசு பஸ்களை பயன்படுத்தும் பயணிகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்ல பி.எம்.டி.சி. சொகுசு பஸ்களை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

பெங்களூரு:

ஏ.சி.பஸ்கள்

பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி) சார்பில் பெங்களூரு நகர், புறநகர் பகுதிகளில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் வசதிக்காக நகரின் முக்கிய இடங்களில் இருந்து ஏ.சி. வசதியுடன் கூடிய சொகுசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த பஸ்களில் வாடகை கார்களுக்கு நிகராக கட்டணம் இருந்தது. இதனால் விமான நிலையத்திற்கு விரைவாக செல்லும் வகையில் வாடகை கார்களை தான் விமான பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கார்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,300 வரை கட்டணம் இருந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்களை இயக்க முடியாததால் பி.எம்.டி.சி.க்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

வாடகை கார்கள் பயன்பாடு குறைவு

குறிப்பாக 500-க்கும் மேற்பட்ட ஏ.சி.பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஏ.சி.பஸ்களின் கட்டணத்தை குறைத்து அந்த பஸ்களை மீண்டும் இயக்க பி.எம்.டி.சி. முடிவு செய்தது. அதன்படி ஏ.சி.பஸ்கள் கட்டணம் தற்போது பல மடங்கு குறைக்கப்பட்டு உள்ளது. நகரில் முக்கிய பகுதிகளில் இருந்து விமான நிலையத்திற்கு தற்போது ரூ.230 முதல் ரூ.250 கட்டணத்தில் ஏ.சி.பஸ்களில் சென்று விடும் நிலை உள்ளது.

உதாரணத்திற்கு மெஜஸ்டிக்கில் இருந்து வாடகை கார்களில் விமான நிலையத்திற்கு செல்ல ரூ.700 முதல் ரூ.1,000 வரை செலவு ஆகிறது. ஆனால் ஏ.சி.பஸ்களில் ரூ.230 முதல் ரூ.250 வரை சென்று விடும் நிலை உள்ளது. இதனால் வாடகை கார்களை பயன்படுத்துவதை விமான பயணிகள் குறைத்து வருகின்றனர்.

ரூ.8 கோடி வருவாய்

இதன்காரணமாக ஏ.சி.பஸ்களுக்கு மவுசு அதிகரித்து உள்ளது. பயணிகள் வருகை அதிகரிப்பதால் பி.எம்.டி.சி.க்கு வருமானமும் அதிகரித்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஏ.சி.பஸ்களை 1.20 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.

அந்த பஸ்கள் மூலம் ரூ.2.90 கோடி வருமானம் கிடைத்தது. தற்போது ஏ.சி.பஸ்களை 3 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மாதம் ரூ.8 கோடி வரை ஏ.சி.பஸ்கள் மூலம் பி.எம்.டி.சி.க்கு வருவாய் கிடைத்து வருகிறது.


Next Story