கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. மீது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அதிருப்தி


கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. மீது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அதிருப்தி
x

பா.ஜனதா பிரமுகரை கொலை செய்தவா்கள் இன்னும் கைது செய்யப்படாததால் போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் மீது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அதிருப்தி அடைந்துள்ளார். உளவுத்துறை போலீஸ் அதிகாரிகளையும் அவர் கண்டித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியாவை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கடந்த 26-ந்தேதி மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மேலும் சூரத்கல்லில் முகமது பாசில் என்பவரும் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த படுகொலை சம்பவங்களால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

டி.ஜி.பி. மீது அதிருப்தி

அப்போது பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டு 4 நாட்கள் ஆகிறது, இன்னும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் மீது தனது அதிருப்தியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிரவீன் நெட்டாரை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்யும்படியும், போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். தட்சிண கன்னடாவில் நடைபெறும் தொடர் கொலைகளால் அரசுக்கும், தனக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டு இருப்பதாக பசவராஜ் பொம்மை அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேலும் தட்சிண கன்னடாவில் நடக்கும் தொடர் கொலை சம்பவங்களில் போலீஸ் துறையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். தட்சிண கன்னடாவில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், அதுபற்றிய தகவல்களை திரட்டுவதிலும் உளவுத்துறை அலட்சியமாக இருந்து விட்டதாக கூடுதல் டி.ஜி.பி. தயானந்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பசவராஜ் பொம்மை எச்சரிக்கை

அந்த சந்தர்ப்பத்தில் பிரவீன் சூட் மற்றும் தயானந்த் குறுக்கிட்டு, தட்சிண கன்னடாவில் நடந்த கொலைகளில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் நபர்கள் கைதாகி இருப்பதாகவும், அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் கூடிய விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவாா்கள் என்றும் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

தட்சிண கன்னடா உள்ளிட்ட மாநிலத்தில் இதற்கு மேல் எந்த விதமான அசம்பாவிதங்கள், வன்முறை சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்றும், அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்குடன் பேசுவதாகவும் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பாதுகாப்பு பிரச்சினையில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story