பீகாரில் நடந்த அரசியல் மாற்றம் குறித்து டுவிட்டரில் ஆன்லைன் வாக்கெடுப்பை நடத்திய பிரசாந்த் கிஷோர்!


பீகாரில் நடந்த அரசியல் மாற்றம் குறித்து டுவிட்டரில் ஆன்லைன் வாக்கெடுப்பை நடத்திய பிரசாந்த் கிஷோர்!
x

2024 மக்களவை தேர்தல் வரை மகா கூட்டணியால் நீடிக்க முடியும் என்று பிரசாந்த் கிஷோர் கருதுகிறார்.

பாட்னா,

பீகாரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், "மகாத்பந்தன் 2.0" கூட்டணி அமைந்தது. பா.ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, பீகார் முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து 2015இல் அமைந்தது போல புதிய கூட்டணியை உருவாக்கி மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

இந்த அதிரடி நடவடிக்கை பாஜகவுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

2015இல் பீகாரில் "மகாத்பந்தன்" (மாபெரும் கூட்டணி) அமைந்தது. இதற்கு முக்கிய பங்கு வகித்தவர் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்.

இந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தல் வரையில், மகா கூட்டணியால் அதிகபட்சமாக நீடிக்க முடியும் என்று அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருதுகிறார்.

பிரசாந்த் கிஷோர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஆன்லைன் வாக்கெடுப்பைத் தொடங்கினார். அதில் பயனர்கள் தனது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவர் கேட்ட கேள்வி வருமாறு:- "கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சி அமைப்பதில் நிதிஷ் குமார் மேற்கொண்ட ஆறாவது சோதனை இதுவாகும். இந்த முறை பீகார் மக்கள் பயன்பெறுவார்கள் என்று நினைக்கிறீர்களா?" என்று டுவிட்டரில் வாக்கெடுப்பை நடத்தியுள்ளார்.

முன்னதாக புதிய கூட்டணி அரசு குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-

இனிமேல் பீகாரில் அரசியல் நிலைத்தன்மை திரும்பும் என நம்புகிறேன். பீகார் மக்களின் விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த அரசியல் நிலைத்தன்மையற்ற நிலை தொடர்கிறது. நிதிஷ்குமார் இப்போது கட்டமைத்துள்ள அமைப்பில் உறுதியாக நிற்பார் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய அரசு முந்தைய அரசை விட சிறப்பாக செயல்படுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும், தேஜஸ்வி யாதவ் பீகாரில் தனிப்பெரும் கட்சியின் தலைவராக உள்ளார். மேலும் இந்த புதிய அமைப்பை இயக்குவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார். பீகாரில் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் மாநிலத்திற்கு நல்ல மாற்றமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

நாட்டில் தேசிய அளவில் மாற்று எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது நடந்ததாக நான் நினைக்கவில்லை. பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று ஒருபோதும் நிதிஷ்குமார் கூறியதாக நான் கேட்கவில்லை.

யார் பிரதமர் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். நிதிஷ் குமார் வேட்பாளராக இருந்தால்கூட அனைத்துக் கட்சிகளும் ஏற்க வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தார்.


Next Story