குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிக பெரும் எதிரிகள்: பிரதமர் மோடி பேச்சு


குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிக பெரும் எதிரிகள்:  பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 11 Dec 2022 8:48 AM GMT (Updated: 11 Dec 2022 8:50 AM GMT)

குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிக பெரும் எதிரிகள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.



நாக்பூர்,


மராட்டிய மாநிலம் நாக்பூரில், மத்திய அரசு ஒப்புதலை அடுத்து, 2017-ம் ஆண்டு ரூ.1,575 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார்.

இதன்பின்பு, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் இருந்தது. இதனை முன்னிட்டு இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மாநில கவர்னர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதன்பின்னர், நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, இந்த அமுத காலத்தில் மாநிலங்களின் வளர்ச்சியானது, நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆற்றலை வலிமைப்படுத்தும் என பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், குறுக்குவழி அரசியலுக்கு எதிராக நான் எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் நமது நாட்டின் மிக பெரும் எதிரிகள்.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடலாம் என்ற நோக்கத்துடன் உள்ளவர்களால் அரசமைக்க முடியாது. வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களை நான் வலியுறுத்தி கூறி கொள்கிறேன் என பேசியுள்ளார்.


Next Story