தேர்தல் வெற்றிக்காக உழைத்த உத்தரபிரதேச காங்கிரசாருக்கு பிரியங்கா நன்றி

இன்றைய அரசியலில் மக்கள் பிரச்சினைகளே முக்கியமானவை என்ற பழைய லட்சியத்தை உத்தரபிரதேச மக்கள் நிலைநாட்டி உள்ளனர் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றிக்காக உழைத்த உத்தரபிரதேச காங்கிரசாருக்கு பிரியங்கா நன்றி
Published on

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 6 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், இந்த வெற்றிக்காக உத்தரபிரதேச காங்கிரசாருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எனது உத்தரபிரதேச காங்கிரஸ் சகாக்களுக்கு வணக்கம். நீங்கள் வெயிலிலும், புழுதியிலும் கடுமையாக உழைத்ததை பார்த்துள்ளேன். நீங்கள் தலைவணங்கவில்லை. கடினமான தருணங்களில் தைரியமாக போராடினீர்கள்.

நீங்கள் சித்ரவதை செய்யப்பட்டீர்கள். பொய் வழக்குகள் போடப்பட்டன. சிறையில் தள்ளப்பட்டீர்கள். மீண்டும் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டீர்கள். இருப்பினும் நீங்கள் பயப்படவில்லை. நிறைய தலைவர்கள் பயத்தில் விலகிய போதிலும் நீங்கள் உறுதியாக நின்றீர்கள்.

உங்களையும், உத்தரபிரதேச மக்களையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நமது அரசியல் சட்டத்தை காப்பாற்றுவதன் அவசியம் குறித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வலிமையான செய்தியை மக்கள் அளித்துள்ளனர்.

இன்றைய அரசியலில் மக்கள் பிரச்சினைகளே முக்கியமானவை என்ற பழைய லட்சியத்தை உத்தரபிரதேச மக்கள் நிலைநாட்டி உள்ளனர். அவற்றை அலட்சியப்படுத்துவதற்கான விலை கடுமையாக இருக்கும். இது, மக்களுக்கான தேர்தல். மக்களே போட்டியிட்டனர். மக்களே வெற்றி பெற்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com