போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர்வலம்; கர்நாடக அரசியலமைப்பு பாதுகாப்பு கூட்டமைப்பினர் நடத்தினர்


போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர்வலம்; கர்நாடக அரசியலமைப்பு பாதுகாப்பு கூட்டமைப்பினர் நடத்தினர்
x
தினத்தந்தி 6 Nov 2022 12:30 AM IST (Updated: 6 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம்சாட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி கர்நாடக அரசியலமைப்பு பாதுகாப்பு கூட்டமைப்பினர் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

ஆனேக்கல்;

பொய் வழக்கு

பெங்களூரு புறநகர் மாவட்டம் சர்ஜாப்புரா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மஞ்சுநாத். இவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், சமூக ஆர்வலர்கள் 18 பேர் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொய் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவர் பதிவு செய்த 18 பேர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் நேற்று முன்தினம் கர்நாடக அரசியலமைப்பு பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சர்ஜாப்புரா போலீஸ் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

பேச்சுவார்த்தை

இதற்காக போராட்டக்காரர்கள் ஹெக்கொண்டஹள்ளி பகுதியில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சர்ஜாப்புரா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த கண்டன ஊர்வலத்தின்போது அவர்கள் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் அவருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர்.

இந்த நிலையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பெங்களூரு புறநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தம், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பரபரப்பு

அப்போது போராட்டக்காரர்கள் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்து மனுவும் கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தம் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story