இலவச மின்சாரம் வாக்குறுதி: டெல்லியில் நிறைவேற்றாதது ஏன்? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய மந்திரி கேள்வி
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை டெல்லியில் நிறைவேற்றினாரா? என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி,
இலவசங்களை வாக்குறுதிகளாக அளித்து வாக்குகள் கோரப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என பிரதமர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து பாஜக தலைவர்கள் கெஜ்ரிவாலின் இலவச அறிவிப்புகளை கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பணக்காரர்களுக்கு வரிகளை தள்ளுபடி செய்து ஏழை மக்கள் மீது வரிகளை சுமத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, "அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர். பல மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். டெல்லியில் அதனை நிறைவேற்றினாரா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகிறது என்றால், ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்கள் தங்கள் குழந்தைகளை அங்கு சேர்க்காதது ஏன்?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.